'ஏம்மா உனக்கு இந்த வேண்டாத வேலை? சம்பந்தா சம்பந்தமில்லாம எதுக்கு இதுல நீ தலையக் குடுத்த?' என்று பலமுறை பலசந்தர்ப்பங்களில் கேட்ட சலிப்புடன் மற்றுமொருமுறை கேட்டேன். நான்கு வீடு தள்ளியிருக்கும் சந்திரா மாமி வீட்டில் இன்று ஒரு கும்பல் சபரி மலை கிளம்புகிறது. அவர்கள் வழி பயணத்திற்காக எங்கள் வீட்டிலிருந்து சப்பாத்தி மற்றும் பூஜைக்காக பாயாசம் தயாராகிக்கொண்டிருந்தது.
'நல்லாருக்குடா நீ பேசர்து! உதவீனு வந்து கேக்கரவாகிட்ட முடியாதுனு எப்படிரா சொல்றது? நிராதரவா நிக்கறா, அதுமட்டுமில்ல, இது சாமி காரியம். தட்டிகழிக்க முடியலப்பா. எல்லாம் நம்ம நல்லத்துக்குத்தான். அந்த தேங்காய செத்த துருவிக்குடேன்!'. 'சரி, என்னமோ பண்ணு. போன வாரம் 'How to say NO without feeling guilty'னு ஒரு புக்கு படிச்சேன். நல்ல புக்கு. அதத் தரேன். அதுலேர்ந்து ஏதாவது படிச்சு கத்துக்கோ. என்ன சொல்ற?' என்று தேங்காய் துருவியவாறே கேட்டேன். 'எங்க இது போதுமா பாரு?'
'அதப் படிச்சு என்ன செய்யப்போறேன்? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். தவிர, இத நான் வேண்டாவிருப்பா செய்யலியே! எனக்கு இது புடிச்சுருக்குடா. போன செமெஸ்டர் மாதிரி இந்தத்தடவயும் நீ நல்லா பரீட்ச்சை எழுதணுமோல்யோ? அதுக்குத்தான்'.
'ஆமாம்! எல்லாத்துக்கும் இப்படி எமோஷ்னல் கொக்கி ஒன்னப் போட்று. எங்கிட்ட மட்டும் வேண்டாம் தேவையில்லை முடியாதுனு கரெக்டா சொல்லு. அவதி படப்போர்து நீதான்!! நான் சொல்றத சொல்லிட்டேன்'
'சரிடா! உன்ன தொந்தரவு செய்யல, போருமா! ஆகவேண்டிய காரியத்தப் பாரு. துருவினது போரும், போய்க் குளி' என்று பலமுறை பலசந்தர்ப்பங்களில் தன்னிலை விளக்கம் கொடுத்த சலிப்புடன் கூறினாள்.
குளித்து விட்டு வந்தேன். சாப்பிடும் வரையில் பேப்பரை புரட்டலாம் என்று சோபாவில் கிடந்ததோடு கிடந்தேன். 'டேய், இதக் கொஞ்சம் சந்திரா ஆத்துவரைக்கும் தூக்கிண்டுவாயேன்!'.
'பேப்பர் படிக்க விடமாட்டியே! வரேன்!', என்று கூறிவிட்டு, செய்திருந்த சப்பாத்தி மூட்டையையும், தேங்காய் பாயாசத்தையும் தூக்கிக்கொண்டு கிளம்பினேன்.
'என்னடாது, பெர்முடாசோட வர? ஒரு வேஷ்டிய சுத்திண்டு வாடா!'.
'ஏன்? வாசலோட குடுத்துட்டு வரப்போறேன். இதுக்கு என்னத்துக்கு வேஷ்டி?'
'தோபாரு! அங்க நாலு பேரு வருவா. பின்னாடிஆத்து தீப்பா வருவா! (கண்ணடிப்பு!!) சொல்ரதக் கேளு. இல்லாட்டி, நானே எடுத்துண்டு போய்க்கிறேன்' என்று இன்னொரு எமோஷ்னல் கொக்கி!
'படுத்தரமா நீ! இரு வறேன்'. ஆர்வத்துடனும், வெறுப்புடனும், வேஷ்டியை சுத்தினேன்......சீ......அணிந்தேன். இடுப்பில் அதன்மேல் பெல்ட் போட்டுக்கொண்டேன்! தூக்கிக்கொண்டு கிளம்பினேன்.
பூஜைக்கு நல்ல கும்பல். ஐயப்ப சாமிமார்களின் உறவுக் கூட்டமாக இருக்கும். உள்ளே நுழைந்தேன். சந்திரா மாமி தூக்கையும், பையையும் வாங்கிக்கொண்டார். சுற்றிலும் பார்த்தேன். பீப்பாய் மாமிகள்தான் தென்பட்டனர். தீப்பாவைக் காணோம். யாரையும் கண் பாராமல் நழுவி வீடு திரும்பப் பார்த்தேன். 'டேய், இருடா! புள்ளயார் பூஜை முடியப்போர்தாம். தீபாராதனைய பாத்துட்டு போ!' என்றாள் அம்மா. தீப்பாவைப் பார்க்கலாமென்றால் தீபாராதனையா? மனதினுள் 'கஜானனம்...' சொல்லிக் கொண்டேன்.
பிள்ளையார் பூஜையும் முடிந்தது. அடுத்தது ஐயப்ப பூஜை தொடங்க இருந்தது. 'மாமி, உங்காத்துப் பையனும் பூ போடரானோல்யோ? பாகம் பிரிக்கணும், அதான் கேட்டேன்', என்றது ஒரு கண(பாடிகள்)க் குரல். கேட்டது..............................என் அம்மாவிடம்! ஐயோ! இதென்னப் புதூக்குழப்பம்?
'டேய், மாமா சொல்லிட்டாரோல்யோ! நீயும் பூஜேலக் கலந்துக்கோ', என்றாள் அம்மா.
'அவர் எங்க சொன்னார்? அவர் கேட்டார்! இல்லனு சொல்லிருமா! பீளீஸ்!', என்றேன், நாய் துரத்தும் பதட்டத்துடன்.
'பெரியவா சொல்றாலோல்யோ! எனக்காக. பத்தே நிமிஷம். எல்லாரும் உனக்காக வெயிட்பண்றா பாரு' என்றாள் சன்னமான, ஆனால் தீர்க்கமான குரலில். எலிப்பொறிக்குள் சிக்கிய எலியைப் போல் உணர்ந்தேன். சுவரோரத்தில் எதேனும் ஓட்டை இருந்தால் ஓடி ஒளியலாம்் போலிருந்தது.
'தம்பி, சட்ட பனியனக் கயடிட்டு வாப்பா. சாமிமார்கள் ரெடியா?' என்றது அந்தக் குரல். இடி மேல் இடி!! வெற்றுடம்போடயா? இதென்னது? சுற்றிலும் பார்த்தேன். அம்மாவைக் காணோம்! 'அடிப் பாவி! எங்கடி மறஞ்ச அதுக்குள்ள?' என்று மனதினுள் ஆதங்கப்பட்டேன். இது என்னது ராகிங்மாதிரி! என் தொந்தி தள்ளிய உடம்பை எல்லோர்க்கும் காட்டவேண்டுமா? ஒரே ஓட்டமாக ஓடிவிடலாம் என்று தோன்றியது. 'போன செமெஸ்டர் மாதிரி இந்ததடவயும் நீ நல்லா பரீட்ச்சை எழுதணுமோல்யோ?' என்றது மனக் குரல் (அம்மா குரல் போலவே இருந்தது!). 'சுவாமியேயேயேய்......................................சரணமையப்பா!'. பூஜையில் உட்கார்ந்துவிட்டேன்.
பூஜை முடிய இரண்டு மணி நேரம் ஆயிற்று! ('பத்தே நிமிஷம்'! அடிப்பாவி). சட்டையை போட்டுக் கொண்டப்பின்தான் பசித்தது. அதன்பின் பந்தி போட்டு சாப்பாடு முடிந்து, சுவாமிமார்களை அனுப்பிவிட்டு வீடு திரும்புகையில், மாலை 5.00 மணி. 'எனக்கு சந்தோஷம்டா! யதேச்சையா வந்த, பூஜைல கலந்துண்டு பூ போட்டப் பாரேன். எல்லாம் நம்ம நல்லத்துக்குத்தான்.' என்றாள்
'எனக்கு என்ன சொல்ரதுனே தெரியலமா. காப்பி கிடைக்குமா?' என்றேன் ஒரு குழம்பிய நிலையில். 'தோ கலந்துண்டுவரேன்'.
வாசலில் அப்பாவின் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. உள்ளே வந்தபடியே, 'என்னடா, பூஜை நல்லபடியா ஆச்சா? சாமிக்குப் பூ போட்டியா?' என்று கேட்டார். யதேச்சையாகச் சென்றேன். கடைசி நிமிடத்தில் அம்மாவின் வற்புருத்தலினால்தான் பூஜையில் பூ போட்டேன். இது எப்படி அதற்குள் அப்பாவிற்குத் தெரிந்தது என்ற சந்தேகாச்சர்ய குரலில், 'அதெப்படிப்பா உனக்கு தெரியும்?' என்றேன்.
'உன்ன எப்படியாவது பூஜைக்கு கூட்டிண்டு போணும்னு, நேத்தே உங்க அம்மா சொன்னா. அதான் கேட்டேன். என்னயும் கட்டி இழுக்கப் பாத்தா. நான், 'இன்னக்கி இன்வெண்டரி டே, லீவ் போடரது கஷ்டம். அவன கூட்டிண்டு போ'னு சொல்லி எஸ்கேப்பாயிட்டேன். போன மாசம் 'How to say NO without feeling guilty'னு ஒரு புக்குப் படிச்சேன். சுமாரான புக்குடா. நீயும் படிச்சுப்பாரு' என்றார், ஒரு நமட்டுச் சிரிப்புடன். திகைப்படைந்தேன். என் தலையில் யாரோ 'நறுக்'கென்று குட்டியதைப் போலிருந்தது!
********
(முற்றும்)