"செரியாறதா?கொள்ளாம்!ஒரு செரிதான் இங்க. மேலே போறதுதான். செத்தா மூணுநாள் நாத்தம் வந்த பெறவுதான் கெவனிச்சியது. சங்கிலிய ஒடைக்கணும்னா அது வலிய வேலை. பூட்டு துரும்பு பிடிச்சு பொயிருக்கும். ஒடைச்சு இழுத்து போடுவம்."
****
....மேடைமீது அவளைப் பலவந்தமாக தூக்கி ஏற்றினர். அங்கே ஒரு திறப்பு இருந்தது. அதன் வழியாக உள்ளே நுழைந்தனர். அடிமரத்தை சேர்த்து அவளை அமுக்கினர். பூசாரி அவள் கூந்தலை மரத்தோடு சேர்த்துவைத்தார். பிறகு அதன்மீது ஆணியை வைத்து அறைந்தார். அம்மாவின் நாக்கு ஒரு சாண் நீளத்திற்கு தொங்குவதைக் கண்டேன். அவள் மணிகட்டுகள் திரும்பி உள்ளங்கைமேலே வந்து தெரிவதைக் கண்டேன். கால் ஒன்று முறுக்கியதில் பாதம் பின்னோக்கித் திரும்பியிருந்தது. ஆணி அறைய அறைய அவள் உடம்பு முறுக்கியபடியே சென்றது.
****
நான் அந்த மாபெரும் அடிமரத்தைச் சுற்றி நடந்தேன். அதன் பின்புறம் பெரியதாக ஒரு வாசல் திறந்திருந்தது. மெல்ல அரை இருட்டில் ஊடுருவி என் பார்வை அந்த மரத்தடியை நன்கு கண்டது. அதன்மீது நெருக்கமாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, ஆணிமுனைகள் தெரிந்தன. தரை மட்டத்தில் இருந்து கையெட்டும் உயரம்வரை அம்மைதழும்புகளைப்போல் அவை அடர்ந்து பரவியிருந்தன. எத்தனயோ வருடங்களாக ஆணிகள் தொடர்ந்து அறையப்பட்டபடியே வருகின்றன. ஆணிகள் ஒவ்வொன்றிலும் ஒரு அதிருப்தியான ஆத்மா.
- அம்மன் மரம், ஜெயமோகன், 1992