Monday, April 24, 2006
திங்கட்கிழமை
பாகம் I
அலாரம் "5:45" என்று அலறியது! சனி, ஞாயிறு காணாமற்போன அதிர்ச்சியுடன் எழுந்தேன்! அலறலைத் தலையில் தட்டி உள்ளங்கைப் பார்த்து கண் கசக்கி எழுந்தேன். வாரக்கடைசி வந்ததும் போனதும் சிறிதும் நினைவிலில்லை. ஒரே சாட்சி, காலைத் தலைவலி மட்டுமே! படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன். திங்கட்கிழமை காலைகள் ஏனோ மனதில் ஒரு சூனியத்தை ஏற்படுத்துகிறது. உறவினர் ஒருவரை இழந்தார்ப்போல் மனதில் ஒரு அழுத்தம். இந்த அழுத்தம் வாரம் போகப் போகக் குறைகிறது. வாரக் கடைசிக்காகத்தான் வாழ்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. அதற்காக நான் பாற்கும் வேலையில் ஈடுபாடில்லை என்றில்லை. வேலை பிடித்துருக்கிறது, அதைவிட காலைத்தூக்கம் மிகவும் பிடித்துருக்கிறது. மனதை இரும்பாக்கிக்கொண்டு, பருகப்போகும் காப்பியின் நறுமணத்தை நினைவுப்படுத்தி, செய்யவேண்டிய சவரத்தை நினைவுக்கூர்ந்து, மேலும் தாமதிக்காமல் காலையை சந்திக்க ஆயத்தமானேன்.
இன்று செய்ய வேண்டிய வேலைகளை மனதில் பட்டியலிட்டப்படியே வீட்டிலிருந்துக் கிளம்பினேன். காப்பியா அல்லது சவரமா அல்லது குளியலாத் தெரியவில்லை. ஏதோ ஒன்று என் மன அழுத்தத்தை நீக்கியது. காலை வெய்யில் உணர்க்கையாக இருந்தது. என் "தொடை மேல்" கணிப்பொறியுடன் வெளியே வந்தேன்.
" 'morning!" - என் அண்டை வீட்டார். பெயர் தெரியாது. ஆனால் பார்த்தால் அடையாளம் கண்டுக்கொள்வோம். தன் நாயுடன் காலை நடைக்குத் தயாரானார். சீனியர் சிட்டிசன். எழுவது எழுவத்தைந்திருக்கும். அதற்குமேலும் இருக்கலாம். வெள்ளையர். செம்புள்ளி நிறைந்த முகம். கண்களுக்கடியில் பலவருட "பீர்" பை. பெறிய மூக்கு, பெரிய காதுகள். சற்றேக் கூன் விழுந்த நடை. கைகளில் நிதானம் தப்பாத ஒரு நடுக்கம். எப்போதும் உதட்டில் ஏதோ முனுமுனுப்பு. நாயுடந்தான் பேசுகிறாரோ என்ற சந்தேகம் எனக்குண்டு. அது ஒரு "வழிகாட்டி நாய்" - "Guide Dog". இரண்டுக் கால்களில் நின்றால் என் உயரம் இருக்கும். அதன் முகத்தில் எப்போதும் ஒரு தன்னிலையரிந்த அமைதியைக் காணமுடியும். "நடப்பவனும் நானே, வழி நடத்துபவனும் நானே" போன்ற அமைதி! ஒரு போதும் குரைத்துப் பார்த்ததில்லை. அவருக்கு அந்த நாயைத் தவிர வேரு யாரும் கிடையாதென்று நினைக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் வேரு மனிதர்களுடன் நான் அவரைப் பார்த்ததில்லை.
"very good morning!" என்றேன்.
"isn't this a beautiful day!?"
"yes, indeed". உரவோ, நட்போ இல்லாமல் இவரால் எப்படி இவ்வுலகை, இக்காலைப் பொழுதை ரசிக்க முடிகிறது? அல்லது ஞானிகளைப் போல் ஏகாந்த நிலையில் ரசிக்கிராரோ? அறியேன்.
"நீ என் வயதில் இருந்தால், அந்த நொடியில் மட்டும் வாழக் கற்றுக்கொள்வாய்!" என்றார் ஆங்கிலத்தில், என் கேள்விக்குப் பதிலளிப்பதைப்போல். திடுக்கிட்டேன்! புன்னகைப் புரிந்தவாரே காரைக் கிளப்பினேன்.
(தொடரும்...)